Tuesday, April 12, 2016

அன்ன தானத்தின் சிறப்பு

அன்ன தானம்


உலகில் தோன்றிய உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழ இன்றியமையாதது உணவேயாகும். உணவின்றி உயிரில்லை.உயிரின்றி உலகில்லை. உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது. வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்களுக்கு அளிப்பதே அன்னதானமாகும். அப்படிபட்ட உணவை பசித்தவர்க்கு அளிப்பது என்பது மிகவும் மேன்மையானது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. பசித்தவர்க்கு உணவு கொடுப்பது என்பது உயிர் கொடுத்ததற்கு ஒப்பாகும்.
~அற்றார் அழிபசி தீர்த்தல் அக்தொருவன் பெற்றார் பொருள் வைப்புழி~ என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். ஏழைகள் பசியால் வாடும்போது, அன்னமிட்டு அப்பசியைப் போக்குபவன் இறையருளைப் பெறுவது உறுதி. இந்த புண்ணியபலன் சரியான சமயத்தில் நம் உயிரையும் காக்கும் என்பதே அவர் கருத்து. அன்னதாதாசுகி பவ – உணவு கொடுப்பவர் சுகமாக வாழ்வார் என்று மூதுரை உரைக்கிறது. அன்னதானம் செய்தால் அடுத்து வரும் ஏழு பிறப்புகளுக்கும் தர்மம் தலை காக்கும் என்றும் சந்ததிகளை வளமாக வாழ வைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்னதானம் செய்வதால் எல்லா விதமான பலன்களும் கிடைக்கும்- வேண்டுதல்களும் நிறைவேறும். அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் இராமலிங்க சுவாமிகள் 1867 ஆம் ஆண்டு தர்மச் சாலையை நிறுவி, அனைவர்க்கும் உணவளித்து பசிப் பிணியை போக்கினார். அன்று அவர் ஏற்றிய அணையாஅடுப்பு இன்றளவும் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கிறது. பசித்தவர்களின் வயிற்றுக்கு உணவளித்து வருகிறது. அன்னதானத்தின் பெருமைகளை குறிப்பிடும்போது, சகமனிதனின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதியைப் பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின் மீது பாய்ந்து, கொல்லும் தருணத்தில், உணவிட்டு காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெயில் வருத்தாது-வறுமை தீண்டாது-இறையருள் எப்போதும் துணை நிற்கும். என்றும் மனதில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும் என்று குறிப்பிடுகின்றார் வள்ளலார். பசித்தவர்களுக்கு பசியை நீக்குகின்ற விஷயத்தில் அடியாரை ஆண்டவன் தடுத்தாலும் கூட சிறிதும் தடைபடாமல் தம் கடமையை செய்ய வள்ளலார் வற்புறுத்துகின்றார். ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவற்றைச் செய்கிறவர்கள் கடவுளர்க்குச் சிறிதும் பாத்திரமாக மாட்டார்கள். பசியென்கிற அபாயத்தில் இருந்து நீங்கச் செய்கின்ற உத்தமர்களை எந்தச் சாதியினராயினும் எந்த சமயத்தவராயினும் எந்த செய்கை உடையவராயினும் அவர்கள் தேவர், முனிவர், சித்தர், போகர் முதலியவராலும் வணங்கத்தக்க சிறப்புடையவர்கள் ஆவர் என்கிறார் வள்ளலார். பசிப்பிணியை நீக்குபவர் பிறவிப்பிணியையே நீங்குவார் என்பார்.
‘அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்
பகரு ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயம் தானே’ .
அந்தணர்க்கு ஆயிரமாயிரம் (கிராமங்கள்) செய்தாலும், ஆயிரமாயிரம் கோட்டை, கோயில்கள் கட்டி முடித்தாலும், ஞானிக்கு அளிக்கப்படும் ஊண் பலம் என்று சொல்லப்படும் அன்னதான தர்மத்திற்கு ஈடாக எந்த செய்கையும் நிச்சயமாக நிகரில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் திருமூலர்.
`பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றூள் எல்லாந் தலை ` என்பார் திருவள்ளுவர்.
நம்மிடம் உள்ள உணவை  உயிர்கள் வாழ பகிர்ந்து அளித்து உண்டு வாழ்பவன் எல்லா உயிரினும் மேலானவராக கருதப்படுகிறார். மனிதருக்கு மட்டுமல்ல-எந்த ஒரு ஜீவராசிக்கும் உணவளிப்பதும் அன்னதானமாகும். ஒரு பிடி சர்க்கரையை எறும்புப் புற்றில் போடுவதும், காக்கைக்கு சோறிடுவதும், பசுவிற்கு தழையைக் கொடுப்பதும் அன்னதானம் தான். இதைத்தான் அன்றே திருமூலர்
~யாவர்க்குமாம் இறைவற் கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.~..........என்றார்.
தானம் மூன்று வகையாக சொல்லப்படுகிறது. தலைப்படு தானம், இடைப்படு தானம், கடைப்படு தானம்.தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் தானம்(தர்மம்) நாற்பத்திரண்டு வகைப்படுத்தப்படுகிறது. அதில் மிக மிக உயர்ந்ததாகவும், உன்னதமாகவும் அனைவரும் செய்தே ஆக வேண்டியதாகவும் கருதப்படுவது அன்னதானமே. இதில் மனிதர்க்கு அரிசிசோறு உணவிடுவது என்பது.சாலச் சிறந்தது. ஏனெனில் அரிசி யில் –அரி என்பது அரியையும்(பெருமாளையும்), சி என்பது சிவனையும் குறிப்பதாகும். அன்னதானத்தில் வழங்கப்படும் அன்னம் (சாதம்) தோஷமற்றது. இந்த அன்னம் ஐந்து தெய்வ அம்சம் கொண்டது. 1) நெல்- தானியம்- தான்யசக்தி. 2) நீர் கொண்டு சமைப்பதால்-நீர் சக்தி. 3) நெருப்பால் சமைப்பதால்- தீ சக்தி. 4) அமிர்த சக்தி. 5) சோறு வேகும் வாசனை ஆகாச சக்தி. ஆக ஐந்து சக்திகளை கொண்டு –ந-ம-சி-வா- என்னும் ஐந்தெழுத்து மந்திரங்களால் ஆனது. உலகின் முதலில் தோன்றிய தாவரமே நெல். தருமம் செய்வதற்கு ஏற்ற இடம் இந்த மண்ணுலகம் ஆகும். அன்னம் அளிக்கும் இடம் பசித்தவர் அங்கமாகிய வயிறு என்பதை உணர்தல் வேண்டும்.` வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்` என்றார் வள்ளல் பெருமான். பயிர் வாடுவது பசுமை (நீர்) இன்மையால். உணவு இன்மையினால். அந்த வாட்டத்தை மனிதரிடம் காண பொறுக்காதவராய்த்தான் பசியால் படும் துன்பத்தை போக்க உறுதி பூண்டு தர்ம சாலை நிறுவி  அனைவர்க்கும் உணவளித்து உலக உயிர்களின்   பசியை போக்குகிறார். 63 நாயன்மார்களில் 30 நாயன்மார்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் மக்களுக்குச் சோறிடும் தொண்டையே வலியுறுத்தியிருக்கிறார்கள். அத்துடன் மட்டுமல்லாமல் மூர்க்க நாயனார் சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்த சிறப்பையும் அதிபத்த நாயனார் நாள்தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனினை இறைவனுக்கு படைத்த பாங்கினையும் நாம் அறிவோம். மண்ணில் மனிதராகப் பிறந்த ஓவ்வொருவரும் அடியார் தமக்கு அன்னமிடுதலாகிய அமுது படைத்தல் வேண்டும் என்று திருஞானசம்பந்த பெருமான் கூறுவார்`.
~மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும்
அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்
காண்ணினால் அவர் நல்விழாப் பொலிவுகண்டார்தல்
உண்மையாமெனில் உலகர்முன் வருகென உரைப்பார்.~
ஒருவருக்கு கொடுத்துவிட்டு நாம் உண்ண வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் பதிய வேண்டும். அப்பொழுதுதான் நம்மிடையே மனிதநேயம் வளரும். நாடும் நலம் பெரும். அன்னதானம் செய்வது பற்றி கூறுகையில் `-
1)   ஓதுவர்க்கு உணவு- கல்வி பயிலுகின்றவர்களுக்கு உணவளித்து அவர்களை பராமரித்தல்.
2)   அறுசமையத்தார்க்கு உண்டி – சமயங்களில் ஆறு வகை உண்டு (சைவம், வைஷ்ணவம்,சமணம், கெவ்மாரம், புத்தம், சாக்தம்) இந்த ஆறுவகைச் சமயத்தாருக்கும் சமய வேறுபாடு இன்றி உணவளித்தல்.
3)   பசுவுக்கு வாயுறை – பசுக்களுக்குத் தீனி அளித்து பராமரித்தல்.
4)   சிறைச்சோறு – கைதிகள் பட்டினியில்லாமல் இருக்க உணவளித்தல்.
5)   ஐயம் – யாசித்து (பிச்சையெடுத்து) வருகிறவர்களுக்கு உணவளித்தல்.
6)   திண்பாண்டம் நல்கல் – வழிபோக்கர்களுக்கு உணவு, குடிநீர் முதலியன கொடுத்து உபசரித்தல்.
7)   அறவைச்சோறு – அநாதைகளுக்கு உணவளித்தல்.
அனைத்தையும் துறந்த பட்டிணத்தடிகள் பசியை மட்டும் துறக்கமுடியவில்லை. அப்பர் பெருமானுக்கு இறைவனே கட்டுச்சோறு சுமந்து வந்து உணவு தருகிறான். சுந்தரருக்கோ இறைவன் பிச்சையெடுத்து வந்து உணவளிக்கிறான். இராமலிங்க அடிகளாருக்கோ வடிவுடையம்மனே அண்ணி உருவத்தில் வந்து உணவளித்து பசியாற்றுகிறாள். பசி என்பது ஒரு பருவத்தில் தோன்றி ஒரு பருவத்தில் மறைந்து விடுவதில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை பசி என்பது இருந்து கொண்டிருக்கும். யார் ஒருவர் மற்றவர் பசியை போக்குகின்றார்களோ அவர்களே உலகத்தில் உயர்ந்தவர்கள்.பசியடைந்தோர்களுக்கு உணவளிப்பதே சிறந்த தானம். இறைவனை அடையும் வழி. முக்தியைப் பெறுவதற்கு முதல் படி என்பதை உணர வேண்டும். ஆகவே பசிப்பிணி நீக்குவது சிறந்த சிவப்பணியாகும்.~வயிற்றுக்கு சோறுண்டு கண்டீர் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்` என்றும் ~ தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்~ – என்றும் மகாகவி பாரதி உரக்கச் சொல்லியுள்ளார். ஆகவே, உணவிடுங்கள்- பசித்தவர்களுக்கு உணவிடுங்கள்- அன்னதானம் செய்யுங்கள்-வாழ்வில் அனைத்து நலனும் பெற்று வாழ்வாங்கு வாழ்வீர்கள்.


 

Wednesday, July 3, 2013

அருட்குரு ஸ்ரீ அக்கா சுவாமிகளின் 143-வது மஹாகுரு பூஜை விழா அழைப்பிதழ்

ஸ்ரீ குரு அக்கா சுவாமிகளின்


143-வது குரு பூஜை விழா அழைப்பிதழ்




அனைவரும் வருக

இறையருள்  பெருக

Friday, May 31, 2013

ஸ்ரீ லட்சுமண சுவாமிகள் பகுதி-2


ஸ்ரீ லட்சுமண சித்தர் சுவாமிகள்



சுவாமிகளின் பெருமையை அப்பகுதி மக்கள்
முழுவதும் அறிந்திருந்தனர்.

தான் அம்பாளின் பாதத்தை அடையும் தருணம்
நெருங்கி விட்டதை உணர்ந்த சுவாமிகள்
புத்துப்பட்டு ஐய்யனார் கோவிலின் பின்புறம்
இருந்த பத்மாசூரன் குளக்கரையின் அருகில் 
தியானத்தில் அமர்ந்து விட்டார்.
நாளடைவில் புற்று மண் வளர்ந்து –சுவாமிகள்
புற்றாகவே மாறி விட்டார்.
சுவாமிகள், 1947-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந்
தேதி சமாதியானார்.

(ராணுவ லாரியில் அடிபட்டு-மறு நாள் காலையில்
ஐய்யானார் கோவிலில் இறந்து கிடந்தவரை
கோவில் பின்புறம் சமாதி வைத்ததாகவும்-
ஒரு செய்தி உண்டு)

இன்றளவும் அவருடைய பக்தர்கள், அவருடைய
சமாதி பீடத்திற்கு வந்து சுவாமிகளுக்கு மலர்
அலங்காரம் செய்து அவருக்கு பிடித்த பால் பாயாசத்தை 
படைத்து அமைதியாக அமர்ந்து
தியானம் செய்து வழிபட்டுச் செகின்றனர்.

சுவாமிகளின் புற்றின் அருகில் ஒரு பெரிய
வேப்ப மரம் வளர்ந்து நிழல் தந்து வருகிறது.
அதை, திருடன் ஒருவன்  வெட்ட முயன்ற
போது- ”வெட்டாதே” என்று அசரீரி எழுந்தது.
அதை பொருட்படுத்தாத அக்கயவன் அம்மரத்தை
வெட்டியதால்-அங்கேயே விழுந்து விட்டான்.
இரவு முழுதும் அவனால் எழுந்திருக்க முடியாமல்
படுத்துக் கிடந்தான். மறு நாள் அவ்வழியே சென்ற
வழிப்போக்கர்கள் அவன் நிலையைக் கண்டு-அவனை
தூக்கிக் கொண்டு போய் அவன் வீட்டில் சேர்த்தனர்.
வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் அவனுடைய
உயிர் பிரிந்தது.
வெட்டிய மரத்தின் துண்டுகள்
ஐய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தின் போது
பயன்படுத்தப்பட்டது.

ஸ்ரீ லஷ்மண சுவாமிகளின் அருட்சக்தியை கண்ணால்
கண்டவர்கள் இன்றும் சிலபேர் உள்ளனர்.
அவரால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள் நல்ல நிலையில்
வசதியாக உள்ளனர்.
சுவாமிகளின் சமாதி பீடத்தினருகில் அமர்ந்து
மனமுருகி, உண்மையாய் வேண்டுபவர்களுக்கு
சுவாமிகளின் திருவருள் கிடைப்பது முற்றிலும்
உண்மை.



ஸ்ரீ லட்சுமண சுவாமிகள் பகுதி-1



               ஸ்ரீ லட்சுமண சித்தர் சுவாமிகள்





புதுவை, வழுதாவூர் சாலையிலுள்ள சண்முகாபுரம்
என்ற ஊரில் பரமசிவன் என்பவர்க்கு மகனாக
பிறந்தார் ஸ்ரீ லஷ்மண சுவாமிகள்.
நல்ல உயரம்-கருப்பு நிறம்-கட்டான தேகம்.
சுறுசுறுப்பான உடல்.
திருமண வயது வந்தவுடன் முனியம்மாள் என்ற
மங்கை நல்லாளை மணந்து இல்லறத்தை
நல்லறமாக நடத்தி வந்தார்.
சிறு வயது முதலே அம்பாளின் மேல் ஈடுபாடு
கொண்ட சுவாமிகள், திருமணமானவுடன்
வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு, அம்பாளின்
பாதங்களை தஞ்சம் புகுந்தார்.
அவரின் பெற்றோர் அவருக்கு எவ்வளவோ
எடுத்துரைத்தும் அவருக்கு இல்லறத்தின் மேல்
நாட்டம் கொள்ளவில்லை. அம்பாளின் தீவிர
பக்தரானார். வீட்டை மறந்து ,தாய்-தந்தையரை
மறந்து, மனைவியையும் மறந்து மீனாட்சிபேட்டை
அம்பாள் கோவிலே சகலமும் என்றிருந்தார்.
யாராவது கொண்டு வந்து தரும் உணவை மட்டுமே
உட்கொண்டு வாழ்ந்தார்.
சுற்றத்தாரின் தொந்திரவினை தாங்க மாட்டாமல்
அங்கிருந்து அகன்று, மரக்காணம் செல்லும்
சாலையில் உள்ள புத்துப்பட்டு என்னும் ஊரில்
உள்ள ஐய்யனார் கோவிலில் வந்து குடியேறினார்.
தன் மேலாடையாக ஒரு சாக்கு துணியை போற்றிக்
கொண்டு- தெருவில் சுற்றிக் கொண்டிருப்பார்.
அதனால் அவரை “ சாக்கு சாமியார்” என்று
அழைப்பதும் உண்டு.
நாயுடன் பேசுவார்-அவராகவே பேசிக் கொள்வார்.
அம்பாளின் நாமங்களையே உச்சரித்துக் கொண்டு
இருப்பார்.
வானத்தில் கோடு போடுவது போல் ஏதாவது
செய்கை காண்பித்துக் கொண்டிருப்பார்.
யாராவது காசு கொடுத்தால் வாங்க மாட்டார்.
அப்படியே வாங்கினாலும் ஒரு காசை மட்டும்
வாங்கிக் கொண்டு அதை அப்படியும்,
இப்படியுமாக திருப்பி திருப்பி பார்த்து விட்டு
தூக்கி போட்டு விடுவார்.
இவர் கடைவீதியில் சென்றால், கடைக்காரர்கள்
தம் கடையில் சுவாமிகளின் கால் படாதா
என்று ஏங்குவார்கள். சுவாமிகளின் கால் பட்ட
இடம் ஒஹோ என்று விளங்குமாம்.
திடீரென்று ஏதாவது ஒரு கடையினுள் அவராகவே
நுழைவார்-கல்லாவை திறந்து அவராகவே காசு
எடுத்துக் கொள்வார். இல்லையென்றால் கல்லாவில்
உள்ள ஒரே ஒரு காசை மட்டும் எடுத்து தெருவில்
வீசி விட்டுச் சென்று விடுவார்.
அப்படிச் செய்தால் அந்த கடைக்காரருக்கு
நல்ல வியாபாரம் நடக்குமாம்.

   பக்தர்களின் குறைகளை கூர்ந்து கேட்பார்..
அதற்கு பரிகாரம் கூறுவார். அவர் சொல்படி கேட்டு
நடப்பவர்களுக்கு அக்குறை விரைவில் தீர்ந்து போகும்
என்பதை மக்கள் கண்டனர்- திடமாக நம்பினர்.
சுவாமிகள், அம்பிகையின் மேல் தீராத ஈடுபாடு
கொண்டிருப்பதை கண்ட மக்கள்-அவரை கடவுளின்
அவதாரமாகவே கருதினர்.
ஐய்யனார் கோவிலில் சுவாமிகள் படுத்து உறங்கிக் 
கொண்டிருப்பார். இரவு வேளைகளில், திடீரென்று
பக்தர்கள் யாராவது விழித்துக் கொண்டு பார்த்தால்
அவர் தலை வேறு- உடல் வேறாக தனித்தனியாக
கிடக்குமாம்..மறு நாள் காலையில் சுவாமிகள் நன்றாக
நடந்து செல்வதை மக்கள் ஆச்சரியத்துடன்
பார்த்திருக்கிறார்களாம்.
சுவாமிகள் பஸ் போகும் பாதையில் திடீர் திடீர்
என அமர்ந்து விடுவாராம். சுட்டெரிக்கும் வெய்யிலையும்
கடும் மழையையும் பொருட்படுத்தாமல் மணிக் கணக்காக உட்கார்ந்திருப்பாராம். அது ஏன் என
யாருக்குமே தெரியாதாம்.


அடுத்த பதிவில் தொடரும்...............

Thursday, May 30, 2013

ஸ்ரீ வண்ணார பரதேசி சித்தர் பகுதி-1


ஸ்ரீ வண்ணார பரதேசி சுவாமிகள்





ஸ்ரீ வண்ணார பரதேசி சுவாமிகள்
220 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.
துயரங்கள் நிறைந்த வீடுகளை தேடிச் சென்று துணி
துவைத்து கொடுத்து – அவர்கள் வழங்கும் உணவை
உண்டு ஆசிர்வாதம் வழங்கி வந்துள்ளார்.

வில்லியனூரில் ஒரு விவசாயி வீட்டில், வீட்டோடு
தங்கியிருந்து வீட்டு வேலைகளை கவனித்து வந்தார்.
ஒரு சமயம் விவசாயியின் நிலத்தின் களத்துமேட்டில்
நெல்லை குவித்து வைத்திருந்தனர்..அதைக் கண்ட         
சில கயவர்கள், களவாட எண்ணி களத்துமேட்டில்
ஒளிந்து கொண்டு இருள் சூழ காத்திருந்தனராம்.
அதை தன் ஞான திருஷ்டியால் கண்டுணர்ந்த
சுவாமிகள் விவசாயின் வீட்டில் தெரிவித்தார்.
ஆனால் யாரும் அதை நம்பவில்லை.
சுவாமிகள் அத்திருடர்களை தன் ஞான சக்தியால்
அங்கேயே கட்டிப் போட்டார்.
மறுநாள் காலையில் வேலையாட்கள் சென்று
பார்த்த பொழுது திருடர்கள் அங்கேயே கட்டுண்டு
கிடப்பதை பார்த்து சுவாமிகளின் சக்தியை புரிந்து
கொண்டனர்.
பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க மழையை
ஏற்படுத்தி நிறுத்தும் சக்தி உள்ளவராம்.
குழந்தை இல்லாதவர்களும், திருமணம்
ஆகாதவர்களும் இவர் சமாதியில் வந்து வேண்டிக்
கொண்டால் குழந்தை பிறக்குமாம்-திருமணம்
நடக்குமாம். இங்குஅன்னதானம் வழங்கினால்
நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.


மேலும்  அவரைப் பற்றி.......

ஸ்ரீ தொள்ளைக்காது சுவாமிகள் பகுதி-2


ஸ்ரீ தொள்ளைக்காது சித்தர்





அக்காலத்தில் புதுவையை ஆண்ட பிரஞ்சு
அதிகாரிகள் முரட்டாண்டி சாவடியின் பெயர்
காரணம் அறிந்து கோபமுற்றனர்.
ஒரு ஆண்டியின் பெயரால்
ஒரு கிராமம் இருப்பதா, என பொறாமைகொண்டு
கவர்னரான துய்ப்ளேக்ஸ், ”துய்ப்ளேக்ஸ் பேட்டை”     “
என்ற தன் பெயரை அக்கிராமத்திற்கு நிறுவினார்.
மேலும் ”முரட்டாண்டி சாவடி”-என அவ்வூரை
சொல்லுகிறவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்
என்றும் அறிவித்தார்.

இதனைக் கண்ட மக்கள் அரசு அதிகாரியிடம்
கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் அந்த
இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் செல்ல
தலைப்பட்டனர்.
முரட்டாண்டியில் பிரஞ்சு அதிகாரிகளின்
தொல்லைகள் அதிகமானதால் சுவாமிகள்
அவ்விடம் விட்டு நகர்ந்து புதுவை பாலாஜி
திரையரங்கு அருகில் உள்ள ஆனந்தரங்கபிள்ளையின்
தோட்டத்திற்கு வந்து ஒரு பகுதியில் சிறு குடிசை
அமைத்துக் கொண்டு தங்கினார். மனித கூட்டத்தை
விட்டு விலகி தனிமையை விரும்பிய
சுவாமிகளுக்கு-அந்த இடம், அவர் மனதில்
அமைதியை தோற்றுவித்தது. ஞான பூமியிலே, சித்தர்கள்,தவசீலர்கள், ஆத்ம சாதனையாளர்கள்
தேடும் பேரின்பம் ஒளிரக்கண்டார்.
தன்னை இப்புதுவைக்கு அழைத்து வந்த அந்த
ஓங்கார ஒலியை வணங்கினார். தான் புதுவைக்கு
அழைத்து வரப்பட்ட நோக்கத்தை உணர்ந்து
கொண்டார்.


 அங்கிருந்து மணற் குளத்து பிள்ளையாரை
தினமும் இரு வேளையும் வழிபட செல்ல
சுவாமிகளுக்கு மிகவும் வசதியாய் அமைந்தது. பிள்ளைத்தோட்டத்து பகுதி மக்கள் சுவாமிகளின்
மேல் மிகவும் அன்பாயிருந்து பணிவிடை செய்து
வந்தனர்.
காலையில் விநாயகரை பூஜை செய்வது வழக்கம்.
பின் முத்து மாரியம்மனிடம் நிஷ்டையில் அமர்வார்.
பின் மொரட்டாண்டி செல்வார். இவ்வளவும்
நடந்தே சென்று முடிப்பார்.
காலங்கள் சென்றன.ஆத்ம சக்தி தீவிரமாக
வெளிப்படத் தொடங்கியது.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மருத்துவ
உதவிகள் செய்து வந்ததுடன் அவர்களின்
குறைகளை கேட்டு தீர்த்து வைத்துள்ளார்.
அவரின் சித்து வேலைகளைக் கண்ட மக்கள்
சுவாமிகளின் குடிசையை “சித்தன் குடிசை” என்று
அழைத்து வந்தனர். இன்றளவும் அப்பகுதி
அப்பெயரிலேயே அழைக்கபடுகிறது. அவரின்
அருளால் அப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து
விட்டது.

சுவாமிகள், காதில் பெரிய துளை
இருந்ததால் பின்னர் அவர் “தொள்ளைக் காது சித்தர்”
என அழைக்கப் பெற்றார்.

”வேதபுரம்”, ”வேதபுரி” என்று அழைக்கப்பெற்ற
இப்புதுவை பெரும்பகுதி காடாக இருந்த பொழுது,
மணற் குளம் என்று அழைக்கப்பட்ட குளக்கரையில்
எங்கிருந்தோ வந்த ஒரு மகரிஷி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து தினமும் பூஜை செய்து வந்ததாக
ஆன்றோர்கள் கூறுவர்.
அந்த ஆண்டி தான் ஸ்ரீ தொள்ளைக்காது சித்தர்.
அந்த மகான் ஸ்ரீ தொள்ளைக்காது சித்தரால் தான்
உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.

காலங்கள் சென்றன. இறைவனின் அழைப்பை
அறிந்தார். மணற் குளத்து பிள்ளையார் அருகிலேயே
தான் சமாதியாக விருப்பம் கொண்டார். தன்
எண்ணத்தை பிள்ளையார் கோவில் அருகில் வசித்து
வந்த மீனவ மக்களிடம் தெரிவித்தார்.
அவர் வேண்டுகோளின் படி அவர் மறைவிற்கு
பின் அவருடைய உடல் பிள்ளையாருக்கு அருகிலேயே
மணற் குளத்தங்கரையில் அப்பகுதி மீனவர்களால்
கரும காரியங்கள் செய்யப்பட்டு சமாதி வைக்கப்பட்டது.

அச்சித்தரின் அருளால், இன்று ஸ்ரீ மணக்குள
விநாயகரின் ஆலயம், புதுவையிலேயே மிகச் சிறந்த
ஆலயமாக திகழ்கிறது.

சுவாமிகளை, முழுவதுமாக நம்புவோர்க்கும்-
உள்ளன்போடு தியானிப்போருக்கும் சித்தரின்
பரிபூரண அருள் கிடைப்பதை இப்புதுவைமக்கள்
கண்ணார காண்கிறார்கள்..



ஸ்ரீ தொள்ளைக்காது சித்தர் பகுதி-1

    

  ஸ்ரீ தொள்ளைக்காது சுவாமிகள்


    
ஸ்ரீ தொள்ளைக்காது சுவாமிகளின் –
இயற் பெயர் என்ன -தாய் தந்தையர் யார்
எப்பொழுது பிறந்தார்-எங்கிருந்து வந்தார்
என்பது யாருக்கும் தெரியாது.
புதுவை, கோரிமேடு அடுத்துள்ள முரட்டாண்டி
என்னும் ஊரிலுள்ள அம்மன் கோவிலில் தான்
ஊர் மக்கள் பார்த்தார்களாம்.
இள வயதிலேயே தந்தையை இழந்த
சுவாமிகள், தாயார் தனக்கு திருமண ஏற்பாடு
செய்வதைக் கண்டு மிரண்டு
போய் தன் குலதெய்வமான அம்மனிடம் 
முறையிட்டார்.
அப்பொழுது அம்மன் தன்னை அழைப்பது
போன்று ஒர் ஒலி கேட்க, அந்த ஒலியை
கேட்டுக் கொண்டே நடக்கத் தொடங்கியவர்
”முரட்டாண்டி” என்ற ஊரை அடைந்தவுடன்
தான் தன் நிலை அடைந்தார்.
அங்கிருந்த முத்து மாரியம்மன் கோவிலை
அடைந்து அம்மனை வேண்டினார்.
இடைவிடாது தாயை வணங்கிக்
கொண்டேயிருந்தார்.
அதி அற்புத அழகு வாய்ந்த அன்னையின்
தரிசனக் காட்சியை- அன்றிரவு கண்ணாரக்
கண்டார். வாய் பேசா ஊமையானார்.
ஞான மோன நிலைக்குள் தன்னை நிறுத்திக்
கொண்டு யாவற்றையும் உணர்ந்தார். அங்கு
சுவாமிகளுக்கு ஞானம் கிடைத்தது.

அத்துடன் அங்கிருந்து ஐந்து மைல்
தொலைவில் உள்ள புதுவைக்குச் சென்று-
கடற்கரை அருகில் இருந்த மணற்
குளத்தங்கரையில் ஒரு விநாயகர் சிலையை
பிரதிஷ்டை செய்து அவ்விநாயகரையும்
வழிபட்டு வந்தார்.
தினமும் காலையில் ஐந்து மைல்கல் நடந்து
புதுவையை அடைந்து, அங்கு விநாயகருக்கு
மலர் அலங்காரம் செய்து- பூஜை செய்து
வழிபட்டுவிட்டு –பின் அங்கிருந்து திரும்பவும்
நடந்து முரட்டாண்டிக்கு
வந்து அம்மனை வழிபட்டு வந்துள்ளார்.
இது அவரின் தினசரி வாடிக்கையானது.

சுவாமிகள் எங்கிருக்கிறார்,என்ன செய்கிறார்,
என்பதை மக்களால் கண்டு கொள்ள
இயலவில்லை. ஆனால், யார், என்ன துன்பம்
என்று சுவாமிகளை தேடி வந்து முறையிட்டாலும்
-அவர்களின் துன்பம் பறந்தோடியது.நோயாளிகள்,
சுவாமிகள் தரிசனத்திலேயே குணமடைந்தார்கள்.
சுவாமிகள் அருளுடலில் ஆத்ம பேரொளி வீசத்
தொடங்கியது.
இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும்
சுவாமிகளிடத்தில் பேரன்புடையவர்களாக
இருந்தார்கள்.

முகத்தில் பல நாள் மீசை தாடியோடு
அழுக்கடைந்த வேஷ்டியுடன்- பார்க்க ஒரு
சாமியாரைப் போல் இருந்ததினால்-மக்கள்
அவரை ”ஆண்டி” என்று அழைத்தார்கள்.
அவரின் முரட்டுத்தனமான செய்கையை
கண்ட மக்கள் அவரை “முரட்டு ஆண்டி” என்று
அழைத்து வந்தனர். காலப்போக்கில் அவர்
தங்கியிருந்த ஊர் அவர் பெயரைக் கொண்டே
“முரட்டாண்டி சாவடி” எனவும், ”முரட்டாண்டி”
எனவும் வழங்கப்படலாயிற்று.  






ஸ்ரீ தேங்காய் சுவாமிகள்


ஸ்ரீ தேங்காய் சுவாமிகள்






புதுவையிலுள்ள மூலகுளம் பகுதியிலிருந்து
சுவாமிகள் வந்ததாக கூறுவர்.
மணவெளி கிராமத்திற்கு அருகிலுள்ள
தண்டுகரை மேடு என்ற பகுதியில் சிறு குடிசை
அமைத்து வசித்து வந்துள்ளார்.
அங்கு தீவிரமான ஆத்ம சாதனையில்
ஈடுபட்டிருந்தார்.
பிரச்சனைகளால் பாதிக்கபட்ட மக்களுக்கு
குறைகளை தீர்த்து வைத்துள்ளார்.
பக்தர்களை தேங்காயை கொண்டு வரச்செய்து அதை
உடைத்து பார்ப்பாராம். தேங்காயினுள் நீல நிறத்தில்
எழுத்துக்கள் தெரியுமாம். அதைப்படித்து பக்தர்களின்
பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வாராம்.
அதனாலேயே ”தேங்காய் சித்தர்” என்ற பெயர்
வந்ததாம். பில்லி சூன்யம் –ஏவல் முதலியவற்றை
விரட்டி அடிப்பாராம். பச்சிலை மூலிகைகளைக்
கொண்டு கை தேர்ந்த வைத்தியம் செய்வாராம்.
அவர் கை பட்டாலே நோய் பறந்து விடுமாம்.

சில ஆண்டுகளுக்கு பிறகு வில்லியனூரில்
மரத்தடியில் அமர்ந்து முக்தி அடைந்து விட்டார்.
அவருக்கு அங்கேயே சமாதி எழுப்பி வழிபாடு
செய்து வருகின்றனர்.

சுவாமிகளுக்கு தேங்காயை வைத்து வழிபட்டால்
பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கை.
இன்றளவும் உள்ளது. .

ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள்


ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள்





ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள் இலங்கையிலிருந்து
தமிழ்நாட்டிற்கு ஆன்மீகச் சுற்றுப்பயணமாக
வந்தார்.
வள்ளலாரை கண்டவர், அவரின் தெய்வீக
ஆற்றலால் ஈர்க்கப்பட்டு தமிழகத்திலேயே
தங்கி ஆத்ம வேள்வி செய்ய இடம் தேடினார்.
ஞானிகளை தன்னகத்தே ஈர்க்கும் சக்தி பெற்ற
இப்புதுவை, சுவாமிகளையும் கவர்ந்தது.
மாபெரும் துறவியர் கூட்டம் புதுவையிலும்,
புதுவையை சுற்றி உள்ள ஊர்களிலும் வசித்து
வருவதை அறிந்து  புதுவையில் சித்தன்குடி
என்ற ஊரை தேர்ந்தெடுத்து இங்கேயே
தங்கி விட்டார்.
சுவாமிகள் குரு சித்தானந்த சுவாமிகள்
பீடத்திற்கு வந்து தவத்தில் ஈடுபட்டார்.
புதுவைக்கு வந்த வள்ளலாரை தரிசித்து
ஆசி பெற்றார். பல நாள் தவத்தின்
விளைவாக ஞானம் கைவரப் பெற்றார்.
உணவு வேண்டி வருபவர்களுக்கு உணவு
வழங்கியும்-ஏழ்மையில் வாடியவர்க்கு உதவியும்
வந்துள்ளார்.
தேங்காய் ஓடுகளை நாணயங்களாக
மாற்றி-கஷ்டப்படுபவர்க்கு கொடுத்து உதவுவார்.
இரக்க குணமும் சித்து விளையாட்டும் இவரை
மகானாக காட்டியது.நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
பச்சிலை மூலிகையினால் நோய்களை
குணப்படுத்தியுள்ளார். தொழுநோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு வியாதியை தீர்த்து
வைக்கும் அற்புத மருத்துவராகவும் விளங்கினார்.


இவர் சாலையில் பின்னோக்கி தான் நடந்து செல்வாராம்.
இவர் வருவதை பார்க்கும் பொதுமக்கள் இவருக்கு வழிவிட்டு
ஒதுங்கி செல்வார்களாம். பிரஞ்சு பொலீஸ் கூட இவரைப்
பார்த்து தொப்பியைக் கழற்றி விட்டு சல்யூட் அடிக்குமாம்.

இவரைப்பற்றி பாரதியார் எழுதிய பாடல்கள்
அநேகம்.
யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்

கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,
தேவிபதம் மறவாத தீர ஞானி,
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்,
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்;
காவிவளர் தடங்களிலே மீஙள் பாயும்
கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்.40

தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும்
துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்;
தோழரே!எந்நாளும் எனக்குப் பார்மேல்
மக்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன்,யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்
சங்கரெனன் றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி. 41

சுவாமிகளின் அளவற்ற ஆற்றலைக் கண்ட
மக்கள் அவரிடம் வந்து ஆசி பெற்ற வண்ணம்
இருந்தனர். பக்தர்கள் மன சஞ்சலமின்றி
மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.


சுவாமிகள், தான் இறைவன் திருவடியைச்
சேரும் தினம் நெருங்கி விட்டதை தன்
ஞானத்தால் உணர்ந்தார்.
சித்தன் குடிசையிலே-அந்த மாந்தோப்பின்
நடுவில் தனக்காக அறுகோண வடிவில்
ஒரு மண்டபம் அமைத்து, அதனுள் தன்
உருவச்சிலையை மரத்தால் செய்து நினைவிடமாக
வைக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள்
வைத்தார்.

நாட்கள் சென்றன. அந்த நாளும் வந்தது.

01-02-1904 –ம் ஆண்டு தை  மாதம் 19ம் நாள்
திங்கட்கிழமை பூச நட்சத்திரம் பௌர்ணமி
திதி அன்று இறைவனுடன் கலந்தார்.

இன்றளவும் சுவாமிகளின் குருபூஜை
தை மாதம் பௌர்ணமி தினத்தன்று
மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


பாரதியார் சந்தித்த யாழ்பானத்து சுவாமிகள்
இவர்தானா என்பது புரியாத புதிராகவே
இருந்து வருகிறது. சிலர் இவர் தான்
என்பார்கள். வேறு சிலரோ யாழ்பானத்து
சுவாமிகள் இவரில்லை-அவர் அருளம்பல
சுவாமிகள் என்பதும் அவர் இலங்கையிலே
சமாதி கொண்டுள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
“ஈழத்துச் சித்தர்கள்” என்ற நூலில் யாழ்பானத்து
சுவாமிகளைப் பற்றியும், பாரதியார் சுவாமிகளை
சந்தித்ததைப் பற்றியும் விளக்கமாக
குறிப்பிடபட்டுள்ளது.