Thursday, May 30, 2013

ஸ்ரீ தொள்ளைக்காது சுவாமிகள் பகுதி-2


ஸ்ரீ தொள்ளைக்காது சித்தர்





அக்காலத்தில் புதுவையை ஆண்ட பிரஞ்சு
அதிகாரிகள் முரட்டாண்டி சாவடியின் பெயர்
காரணம் அறிந்து கோபமுற்றனர்.
ஒரு ஆண்டியின் பெயரால்
ஒரு கிராமம் இருப்பதா, என பொறாமைகொண்டு
கவர்னரான துய்ப்ளேக்ஸ், ”துய்ப்ளேக்ஸ் பேட்டை”     “
என்ற தன் பெயரை அக்கிராமத்திற்கு நிறுவினார்.
மேலும் ”முரட்டாண்டி சாவடி”-என அவ்வூரை
சொல்லுகிறவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்
என்றும் அறிவித்தார்.

இதனைக் கண்ட மக்கள் அரசு அதிகாரியிடம்
கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் அந்த
இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் செல்ல
தலைப்பட்டனர்.
முரட்டாண்டியில் பிரஞ்சு அதிகாரிகளின்
தொல்லைகள் அதிகமானதால் சுவாமிகள்
அவ்விடம் விட்டு நகர்ந்து புதுவை பாலாஜி
திரையரங்கு அருகில் உள்ள ஆனந்தரங்கபிள்ளையின்
தோட்டத்திற்கு வந்து ஒரு பகுதியில் சிறு குடிசை
அமைத்துக் கொண்டு தங்கினார். மனித கூட்டத்தை
விட்டு விலகி தனிமையை விரும்பிய
சுவாமிகளுக்கு-அந்த இடம், அவர் மனதில்
அமைதியை தோற்றுவித்தது. ஞான பூமியிலே, சித்தர்கள்,தவசீலர்கள், ஆத்ம சாதனையாளர்கள்
தேடும் பேரின்பம் ஒளிரக்கண்டார்.
தன்னை இப்புதுவைக்கு அழைத்து வந்த அந்த
ஓங்கார ஒலியை வணங்கினார். தான் புதுவைக்கு
அழைத்து வரப்பட்ட நோக்கத்தை உணர்ந்து
கொண்டார்.


 அங்கிருந்து மணற் குளத்து பிள்ளையாரை
தினமும் இரு வேளையும் வழிபட செல்ல
சுவாமிகளுக்கு மிகவும் வசதியாய் அமைந்தது. பிள்ளைத்தோட்டத்து பகுதி மக்கள் சுவாமிகளின்
மேல் மிகவும் அன்பாயிருந்து பணிவிடை செய்து
வந்தனர்.
காலையில் விநாயகரை பூஜை செய்வது வழக்கம்.
பின் முத்து மாரியம்மனிடம் நிஷ்டையில் அமர்வார்.
பின் மொரட்டாண்டி செல்வார். இவ்வளவும்
நடந்தே சென்று முடிப்பார்.
காலங்கள் சென்றன.ஆத்ம சக்தி தீவிரமாக
வெளிப்படத் தொடங்கியது.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மருத்துவ
உதவிகள் செய்து வந்ததுடன் அவர்களின்
குறைகளை கேட்டு தீர்த்து வைத்துள்ளார்.
அவரின் சித்து வேலைகளைக் கண்ட மக்கள்
சுவாமிகளின் குடிசையை “சித்தன் குடிசை” என்று
அழைத்து வந்தனர். இன்றளவும் அப்பகுதி
அப்பெயரிலேயே அழைக்கபடுகிறது. அவரின்
அருளால் அப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து
விட்டது.

சுவாமிகள், காதில் பெரிய துளை
இருந்ததால் பின்னர் அவர் “தொள்ளைக் காது சித்தர்”
என அழைக்கப் பெற்றார்.

”வேதபுரம்”, ”வேதபுரி” என்று அழைக்கப்பெற்ற
இப்புதுவை பெரும்பகுதி காடாக இருந்த பொழுது,
மணற் குளம் என்று அழைக்கப்பட்ட குளக்கரையில்
எங்கிருந்தோ வந்த ஒரு மகரிஷி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து தினமும் பூஜை செய்து வந்ததாக
ஆன்றோர்கள் கூறுவர்.
அந்த ஆண்டி தான் ஸ்ரீ தொள்ளைக்காது சித்தர்.
அந்த மகான் ஸ்ரீ தொள்ளைக்காது சித்தரால் தான்
உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.

காலங்கள் சென்றன. இறைவனின் அழைப்பை
அறிந்தார். மணற் குளத்து பிள்ளையார் அருகிலேயே
தான் சமாதியாக விருப்பம் கொண்டார். தன்
எண்ணத்தை பிள்ளையார் கோவில் அருகில் வசித்து
வந்த மீனவ மக்களிடம் தெரிவித்தார்.
அவர் வேண்டுகோளின் படி அவர் மறைவிற்கு
பின் அவருடைய உடல் பிள்ளையாருக்கு அருகிலேயே
மணற் குளத்தங்கரையில் அப்பகுதி மீனவர்களால்
கரும காரியங்கள் செய்யப்பட்டு சமாதி வைக்கப்பட்டது.

அச்சித்தரின் அருளால், இன்று ஸ்ரீ மணக்குள
விநாயகரின் ஆலயம், புதுவையிலேயே மிகச் சிறந்த
ஆலயமாக திகழ்கிறது.

சுவாமிகளை, முழுவதுமாக நம்புவோர்க்கும்-
உள்ளன்போடு தியானிப்போருக்கும் சித்தரின்
பரிபூரண அருள் கிடைப்பதை இப்புதுவைமக்கள்
கண்ணார காண்கிறார்கள்..



No comments:

Post a Comment