Thursday, May 30, 2013

ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள்


ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள்





ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள் இலங்கையிலிருந்து
தமிழ்நாட்டிற்கு ஆன்மீகச் சுற்றுப்பயணமாக
வந்தார்.
வள்ளலாரை கண்டவர், அவரின் தெய்வீக
ஆற்றலால் ஈர்க்கப்பட்டு தமிழகத்திலேயே
தங்கி ஆத்ம வேள்வி செய்ய இடம் தேடினார்.
ஞானிகளை தன்னகத்தே ஈர்க்கும் சக்தி பெற்ற
இப்புதுவை, சுவாமிகளையும் கவர்ந்தது.
மாபெரும் துறவியர் கூட்டம் புதுவையிலும்,
புதுவையை சுற்றி உள்ள ஊர்களிலும் வசித்து
வருவதை அறிந்து  புதுவையில் சித்தன்குடி
என்ற ஊரை தேர்ந்தெடுத்து இங்கேயே
தங்கி விட்டார்.
சுவாமிகள் குரு சித்தானந்த சுவாமிகள்
பீடத்திற்கு வந்து தவத்தில் ஈடுபட்டார்.
புதுவைக்கு வந்த வள்ளலாரை தரிசித்து
ஆசி பெற்றார். பல நாள் தவத்தின்
விளைவாக ஞானம் கைவரப் பெற்றார்.
உணவு வேண்டி வருபவர்களுக்கு உணவு
வழங்கியும்-ஏழ்மையில் வாடியவர்க்கு உதவியும்
வந்துள்ளார்.
தேங்காய் ஓடுகளை நாணயங்களாக
மாற்றி-கஷ்டப்படுபவர்க்கு கொடுத்து உதவுவார்.
இரக்க குணமும் சித்து விளையாட்டும் இவரை
மகானாக காட்டியது.நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
பச்சிலை மூலிகையினால் நோய்களை
குணப்படுத்தியுள்ளார். தொழுநோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு வியாதியை தீர்த்து
வைக்கும் அற்புத மருத்துவராகவும் விளங்கினார்.


இவர் சாலையில் பின்னோக்கி தான் நடந்து செல்வாராம்.
இவர் வருவதை பார்க்கும் பொதுமக்கள் இவருக்கு வழிவிட்டு
ஒதுங்கி செல்வார்களாம். பிரஞ்சு பொலீஸ் கூட இவரைப்
பார்த்து தொப்பியைக் கழற்றி விட்டு சல்யூட் அடிக்குமாம்.

இவரைப்பற்றி பாரதியார் எழுதிய பாடல்கள்
அநேகம்.
யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்

கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,
தேவிபதம் மறவாத தீர ஞானி,
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்,
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்;
காவிவளர் தடங்களிலே மீஙள் பாயும்
கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்.40

தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும்
துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்;
தோழரே!எந்நாளும் எனக்குப் பார்மேல்
மக்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன்,யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்
சங்கரெனன் றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி. 41

சுவாமிகளின் அளவற்ற ஆற்றலைக் கண்ட
மக்கள் அவரிடம் வந்து ஆசி பெற்ற வண்ணம்
இருந்தனர். பக்தர்கள் மன சஞ்சலமின்றி
மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.


சுவாமிகள், தான் இறைவன் திருவடியைச்
சேரும் தினம் நெருங்கி விட்டதை தன்
ஞானத்தால் உணர்ந்தார்.
சித்தன் குடிசையிலே-அந்த மாந்தோப்பின்
நடுவில் தனக்காக அறுகோண வடிவில்
ஒரு மண்டபம் அமைத்து, அதனுள் தன்
உருவச்சிலையை மரத்தால் செய்து நினைவிடமாக
வைக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள்
வைத்தார்.

நாட்கள் சென்றன. அந்த நாளும் வந்தது.

01-02-1904 –ம் ஆண்டு தை  மாதம் 19ம் நாள்
திங்கட்கிழமை பூச நட்சத்திரம் பௌர்ணமி
திதி அன்று இறைவனுடன் கலந்தார்.

இன்றளவும் சுவாமிகளின் குருபூஜை
தை மாதம் பௌர்ணமி தினத்தன்று
மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


பாரதியார் சந்தித்த யாழ்பானத்து சுவாமிகள்
இவர்தானா என்பது புரியாத புதிராகவே
இருந்து வருகிறது. சிலர் இவர் தான்
என்பார்கள். வேறு சிலரோ யாழ்பானத்து
சுவாமிகள் இவரில்லை-அவர் அருளம்பல
சுவாமிகள் என்பதும் அவர் இலங்கையிலே
சமாதி கொண்டுள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
“ஈழத்துச் சித்தர்கள்” என்ற நூலில் யாழ்பானத்து
சுவாமிகளைப் பற்றியும், பாரதியார் சுவாமிகளை
சந்தித்ததைப் பற்றியும் விளக்கமாக
குறிப்பிடபட்டுள்ளது. 

No comments:

Post a Comment